வடிவற்புத விடிகாலையில் தொடங்கிட்டது பயணம்
அடிஉந்தியில் பசிஉந்திட இடர்ஆயிரம் தொடரும்
குடல்வற்றிடக் கடல்வீதியில் நடையாறிடும் பரவர்
முடப்புன்னகை புரியாதொரு முழுநாள்அவர் கனவு.
கடலோடிடும் படகுக்கதன் துடுப்பென்பது சகடம்
உடனாடிடும் உடலங்களில் உழைப்பென்றொரு மகுடம்
நடுமத்தியில் அலைமேடையில் கயலாடிய நடனம்
படுமோர்கணம் வலைஞர்மனம் அடடாவென மகிழும்.
விடம்வென்றிடும் திடம்உண்டெனும் சுடரோடொளிர் வதனம்
நடுசூரிய நடவால்எழில் வியர்வைப்பயிர் விளையும்
படும்பாட்டினில் கிடைக்கின்றது இவருக்கொரு கவளம்
தொடுமுன்னது மறைகின்றது இதுஎன்னடி துயரம்?
துயரங்களின் உயரங்களில் உயிர்வாழ்வதை விடவும்
சயனம்தனில் மடிதல்நலம் ஜெயமாகணும் மரணம்
தயவாய்அழும் சுயசோகமும் பொதுவாகுதல் முறையோ?
புயமோங்கியும் வறுமைஎனும் பயமோங்குதல் சரியோ?
அடிஒன்றிலும் இடிபாய்வது இனிநம்முடை நியதி
படியாதுள விடியல்களை வரவைத்திடும் உறுதி
குடியாட்சியில் முடியாட்சியைக் குடிவைப்பதும் இனிமேல்
நடவாதெனும் முடிவானதும் அகலும்நம தவலம்.
மெலியோர்தமை மிதிப்போர்தமை மனதால்நிதம் ஒழிப்போம்
கொடுவஞ்சக, படுபாதகச் சதைகூறிட உழுவோம்.
கெடுவோர்இலை கெடுப்போர்இலை எனும்நாளினில் புடைப்போம்
அதிமானுடக் கதியோங்கிடப் புதுசாத்திரம் படைப்போம்.
================================================
- எனது 'உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு' என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து - முதல் பதிப்பு: 1997 நவம்பர்
- இணையத்தில் முதல் பதிப்பு: http://www.vallamai.com/?p=1861
1 comment:
புதுசாத்திரம் படைப்போம்.
Post a Comment