நெரிசலான சாலையிலே நெருப்பெனுமோர் பாலையிலே
நீர்சுமந்து காற்று வந்தது.
இரைச்சலான காரமான இறுக்கமான சுற்றளவில்
இனிக்கும்இசைப் பாடல் வந்தது.
கருகருத்த காலவெளி மருளுடுத்து மூடுகையில்
கர்ப்பூர தீபம் வந்தது.
உருக்குலைந்து திருக்கலைந்து உலகெறிந்த போதினிலே
ஒய்யாரப் பெண்மை வந்தது.
நாவறண்டு மெய்தளர்ந்து நடுக்காட்டில் நிற்கையிலே
நறுங்குளிர்நீர்ப் பந்தல் வந்தது.
பூவனத்து மண்வெடிக்க, பூச்சியத்துள் சதமடிக்க,
பொன்வானில் கங்கை வந்தது.
நோவெடுத்து நீர்வடித்து நோக்கழியும் வேளையிலே
நூதனக் களிம்பு வந்தது.
சாவெனக்குப் பக்கத்தில் சம்மணக்கால் இட்டபோது
சஞ்சீவிப் பெண்மை வந்தது.
பேசுமொழி புரியாமல் பிறநாட்டில் நிற்கையிலே
தாய்மொழிச்சொல் ஒன்று வந்தது.
காசிலாத வேளையிலே கடன்காரர் சூழ்கையிலே
கருவூலம் ஒன்று வந்தது.
ஏச்சுகளும் எள்ளல்களும் ஏறிவரும் அந்நேரம்
இதமான வார்த்தை வந்தது.
வீச்சுடைய விரிவானம் விரைந்தென்னைக் கவ்வுகையில்
விளையாடும் பெண்மை வந்தது.
(அமுதசுரபி - செப்டம்பர் 2004)
4 comments:
நிலைகுலைந்து மனமிறுகி நெஞ்செரிந்து நிற்கையிலே
தோள்கொடுக்க உன்பாடல் வந்தது....
வீச்சுடைய விரிவானம் விரைந்தென்னைக் கவ்வுகையில்
விளையாடும் பெண்மை வந்தது
”கடைசி வரை காக்கவென்றே கருணை வந்தது காக்கின்ற மனம் கொண்டே பெண்மை கனிந்தது”
அன்புடன்
தமிழ்த்தேனீ
நாவறண்டு மெய்தளர்ந்து நடுக்காட்டில் நிற்கையிலே
நறுங்குளிர்நீர்ப் பந்தல் வந்தது.//
மிக அருமையான வரிகள் .பெண்மையைப் போற்றும் எவருக்குமெந்நாளும் எந்தத் துன்பமும் வராமல் இருக்கும்.
சஞ்சீவப் பெண்மை வந்தது
அருமை கவிதை
Post a Comment