முகநானூறு என்ற தலைப்பில் இலக்கியப் பாசறை இதழில் நான் வெண்பாத் தொடர் ஒன்று எழுதினேன். அதில் எழுதிய இன்னொரு மாலை மாற்று இங்கே. (மாலை மாற்று என்பது, தலைகீழாகத் திருப்பிப் படித்தாலும் அதே பாடல் மீண்டும் வருமாறு எழுதுவது). 1997 மே, ஜூன் இதழில் 'நாக்கு' என்ற தலைப்பில் வெளியான அத்தியாயத்தின் முதற்பாடல் இது:
நாள்உலை கொதி அசீரண உலாதுதி
நீள்கதை சரிக வருது - வாழ்வா
துருவ கரிசதைகள் நீதி துலா உ
ணரசீ அதிகொலை உள் நா.
இதைப் பின்வருமாறு பொருள் கொள்ளலாம்:
நாள் என்ற உலை கொதிக்கிறது. அது தரும் உணவோ செரிக்கவில்லை. அந்த அசீரணத்துடன் வாழ்க்கை உலா தொடர்கிறது. ஆயினும் இதுவே பெருவாழ்வு எனத் துதித்துப் போற்றுகிறோம். இந்த நீள்கதை சரிக. நாம் எதிர்கொண்டு வருவது வாழ்வா? துருவிப் பார்க்கிறோம். வாழ்வின் அழுத்தங்களால் கரியாக உருமாறும் ஒரு வகை வாழ்வு. அதுவும் எரியூட்டப்படுவதற்கே. சதையின் கவர்ச்சி உள்ள வரை அதன் பின் அலையும் ஒரு வாழ்வு. பழக்கங்களுக்கு அடிமையாகி, கள்ளெனப் போதை மிகுந்து நிற்கும் இன்னொரு வாழ்வு. நம் வாழ்வுக்கு நாம் அளிக்கும் நீதியா இது? நம் உளத் தராசில் நிறுத்துப் பார்த்தால் உண்மை தெரியும். அதை உணரும்பொழுது, சீ என வெட்கித் தலை குனிவோம். அப்போது நம் உள்ளத்தின் நாக்கு, கொடும் வேதனையால் கொலையுண்டு கிடக்கும். அந்த மவுனத்தின் அலறல் கேட்கிறதா?
வெண்பா யாப்பின்படி அலகு பிரித்துக் காட்டவேண்டும் எனக் கேட்போருக்காக:
நாள்உ லைகொதி அசீரணஉ லாதுதி
நீள்க தைசரி கவருது - வாழ்வா
துருவ கரிசதைகள் நீதி துலாஉ
ணரசீ அதிகொலைஉள் நா.
====================================================
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
1 comment:
அண்ணாகண்ணன்
பாலாவின் இந்த இடுகையில் மாலைமாற்று தொடர்பான சில சுட்டிகளும் உதாரணங்களும் உள்ளன. சுவையாரமா யிருக்கெமென நம்பலாம் :-)
அன்புடன்
வெங்கட்ரமணன்
Post a Comment