அண்ணாகண்ணன் கவிதைகள்: தென்றல் வானொலியில் வாசித்த கவிதை

Friday, August 19, 2005

தென்றல் வானொலியில் வாசித்த கவிதை

(சென்னையில் நிகழ்ச்சிகள் ஒலிப்பதிவாகி, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தென்றல் இணைய வானொலியில் 1-1-2005 அன்று நான் சில கவிதைகளை வாசித்தேன். அவற்றில் ஒன்று, இது. சுனாமியின் தாக்கம் மிகுதியாக இருந்த நாள்கள் அவை என்பதை மனத்தில் இறுத்தி வாசிக்க வேண்டுகிறேன்.)

கடலைப் பார்க்கிறேன்.
அச்சத்தோடும் அவநம்பிக்கையோடும்.

ஓம் என்ற பிரணவம் - இன்று
ஓ என்ற ஓலம்.

கடற்கரையிலிருந்து திரும்பும்போதெல்லாம்
எவ்வளவு உதறினாலும் ஒட்டியபடியே இருக்கும்
மணல் துகள்கள்.

அலையோரம் நிற்கும்போதெல்லாம்
பாதத்தின் கீழே குழி பறிக்கும் அலைகள்.

ஓய்வெடுக்கும் கட்டுமரங்கள்
காதலைக் கட்டும் மரங்களாகப் பாதுகாக்கும்.

மணலை மேடிட்டு
அதற்குள் ஒரு குச்சியை மறைத்துக்
கண்டுபிடித்து விளையாடியுள்ளோம்.

இன்று உடல்களைத் தனித்தனியாகப் புதைக்க நிலமில்லை.
மொத்தமாகப் புதைக்கப் பழகிவிட்டோம்.
எங்கள் ஆசைகள், கனவுகள், நினைவுகள்
அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டோம்.

கரையோரக் காலடிச் சுவடுகள் மொத்தமாக அழிந்துவிட்டன.
சுவடுகளைப் பதித்தவர்களும் சுவடு தெரியாமல் போயினர்.
கடல் தன் பங்குக்குச் சில சுவடுகளைப் பதித்துள்ளது.

குழந்தைகள், மணல் கோபுரங்களைக் கட்டி விளையாடிய வெளி அது.
விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாத குழந்தைகள்,
கட்டியவற்றை இடித்துவிட்டு ஓடுவர்.
என் கரையில் அமர்ந்து
என்னையே சேர்த்துக்கொள்ளவில்லையா?
சினமுற்ற கடல், கடலோர வீடுகளை எல்லாம் அழித்துவிட்டது.

கடல் போல் பொறுமை வேண்டும் என்றனர்.
சுனாமியே அவர்களை நோக்கிப் போ.

அநீதி நிகழ்கையில் கடல் பொங்கும்.
அது கடலுக்கே பொறுக்காது என்பர்.
எந்த அநீதிக்காக இப்படிப் பொங்கினாய் கடலே.
பூம்புகாரில் பிறந்த கண்ணகியிடமிருந்து கற்றுக்கொள்.
அப்பாவிகள், ஊனமுற்றோர், குழந்தைகள், பெண்கள்...முதலியவர்களை
விட்டுவிட்டு தீயவர்களை மட்டும்தானே அவள் தீயிட்டாள்!

கள்ளக் கடலே கட்டுக்குள் இரு.
உள்ளக் கடலில் சுனாமி.
அழித்துப் போட்டதாய் ஆட்டமிடாதே.
உழைத்துக் கட்ட உயரும் எம் கைகள்.

பித்துப் பிடித்த பேய் அலைகள்
கற்றுக் கொடுத்த பாடம் இதுதான்.
உதவி என்ற ஒற்றைச் சொல்லே
விதவை நிலத்தை விளங்க வைக்கும்.

சடலம் மீண்டும் உடலம் ஆக
மயானம் மீண்டும் வளநகர் ஆக
ஆழிப் பேரலை அமைதி கொள்ளுக
தோழர் நம்மவர் தூக்கி விடுக.

முத்துக் கடலே மெளனம் கொள்ளுக
உத்தமர்களே உதவிக்கு வருக.

No comments: