
விடிய விடியக் கொட்டுது
விடிந்த பின்னும் சொட்டுது
முத்து முத்தாய்ச் சிதறுது
முரட்டுத் தனம் தெரியுது
பித்துப் பிடித்த பேய்மழை
பின்னிப் பின்னி எடுக்குது.
காணும் எங்கும் வெள்ளமே.
காணவில்லை பள்ளமே.
கோணம் கொள்ளை கொள்ளுமே
குளிர்ச்சி நம்மை அள்ளுமே.
பளீர் பளீர் மின்னலே
படார் படார் இடிகளே
சுளீர் சுளீர் சாரலே
தொடரும் தவளைப் பாடலே!
கருத்த வானம் மிரட்டுது
கையில் குடையைத் திணிக்குது
கருணை அற்ற காற்றதைக்
கையில் இருந்து பிடுங்குது.
நாடு நகரம் மிதக்குது
நதியும் கரையை உடைக்குது
காடு வயல் மூழ்குது
கடலும் எல்லை மீறுது.
கூடும் போதும் சிக்கலே
குறையும் போதும் சிக்கலே.
கோடு தன்னில் நிற்குமேல்
கோடி நன்மை கிட்டுமே!
வானப் பரிசு வருகவே!
மாதம் தோறும் பொழிகவே!
மானம் காக்கும் மாமழை
வருக வருக வருகவே!!