அண்ணாகண்ணன் கவிதைகள்: November 2014

Tuesday, November 18, 2014

திருவாய் திறவாய்


சின்னவாய் திறந்து பேசுவாய்
தென்றலாய்க் குளிர்ந்து வீசுவாய்
மின்னுவாய் குறும்பு பண்ணுவாய்
வெற்றிமேல் வெற்றி எண்ணுவாய்
தின்னுவாய் அளந்து தூங்குவாய்
தீமையை விடுத்து நீங்குவாய்
பின்னுவாய் சிரித்துப் பாடுவாய்
பிள்ளையே குதித்து ஆடுவாய்!

மீட்டுவாய் புதுமை காட்டுவாய்
தீட்டுவாய் வண்ணம் கூட்டுவாய்
சூட்டுவாய் கொடியை நாட்டுவாய்
சோர்வினை விரட்டி ஓட்டுவாய்
பூட்டுவாய் இருளின் ஊற்றுவாய்
புன்னகை தீபம் ஏற்றுவாய்
மூட்டுவாய் சுடரை நீட்டுவாய்
முல்லையே முத்தம் ஊட்டுவாய்!

மீறுவாய் கிழக்கில் ஏறுவாய்
மின்னலாய் வானைக் கீறுவாய்
மாறுவாய் அடுத்து மாற்றுவாய்
வேரிலே நீரை ஊற்றுவாய்
நூறுவாய் கொண்டும் கூறுவாய்
உண்மையே வெல்லும் சேருவாய்
சீறுவாய் பழிக்கு அஞ்சுவாய்
செல்லமே என்னைக் கொஞ்சுவாய்!

(தமிழ் சிஃபியில் முன்பு வெளியான பாடல்)